ற்போதைய காலகட்டத்தில், ஒரு தகுதியான- கௌரவமான வேலை கிடைக்கவேண்டுமென்றால் நல்ல மதிப் பெண் மட்டுமல்ல; தன்னம்பிக்கை, சொந்த கருத்துகளைத் தெளிவாகக் கூறும் தன்மை, பேச்சாற்றல், தைரியம் போன்ற பல விஷயங் களை ஆராய்ந்து, நேரிலும் கணினிமூலமும் சோதித்து திருப்தியானபிறகே வேலைக் கான உத்தரவு கிடைக்கப் பெறுகிறது.

Advertisment

இதனை எதிர்கொள்ளும் இளைஞர் களுக்கு ஒரு எண்ணம் தோன்றும். ஒரு வேலைக்கே நமக்கு இத்தனை பரிட்சை வைக்கிறார்கள். ஆனால் வாழ்வு முழுவதும் பிணையப்போகும் திருமணத்துக்கு, ஜோதிடம் என்னும் பெயரில் ஒரு கட்டத்தை வைத்துக்கொண்டு பெற்றோர்கள் அலை கிறார்களே என எண்ணுகிறார்கள்.

எனினும் 12 ஜாதகக் கட்டங்களும் ஒருவரின் அத்தனை குணாதிசயங்களையும் தெளிவுபட கூறிவிடும். திருமணத்துக்குப் பார்க்கும் ஆணோ பெண்ணோ- அவர் களின் உண்மைத் தன்மைகளை- குணங் களை- குறைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் பிறந்த நேரத்தை வைத்து லக்னம் கணிக்கப்படும். இதுவே முதல் கட்டம். பிறந்த நேர நட்சத் திரத்தைக்கொண்டு ராசி கணக்கிடப் படுகிறது.

லக்னம்

ஒருவரது லக்னத்தைக்கொண்டு ஜாதகரின் குணம், ஒழுக்கம், மதிப்பு, மனோ பாவம் ஆகியவற்றைக் கூறிவிடலாம். ஒரு துப்பறியும் நிபுணரை நியமித்து வரனைப் பற்றி என்ன விஷயங்களை அறிய முடியுமோ, அதனைவிட அதிகமாகவே தெரிந்துகொள்ளலாம். லக்னத் தில் அமர்ந்த கிரகத்தின் சுப- அசுபத் தன்மை, லக்னாதிபதி அமர்ந்த இடம் ஆகியவற்றைக்கொண்டு வரனது லட்சணத்தை அறிய இயலும். லக்னம் எதுவாக இருந்தாலும் சரி.

Advertisment

vvv

லக்னத்தில் குரு சுபமாக இருந்தால் பார்க்கும் ஆண் நல்ல ஒழுக்கமானவர். வீட்டுக்கும் சட்டத்துக்கும் கட்டுப் பட்டு நடப்பவர். தெய்வபக்தி உள்ளவர். நம்பி பெண்ணைக் கொடுக்க லாம். இதே குரு அசுபமாகி, நீசமாகி லக்னத்தில் இருந்தால் அல்லது குரு லக்னாதிபதியாகி 8-ல் அமர்ந்தால், கொஞ்சமல்ல; நன்றாக பையனையும் பெண்ணையும் விசாரிக்கவேண்டும். கட்டுக்குள் இருக்கமாட்டார்கள். வரம்புமீறிச் செல்வார்கள். தெய்வ நம்பிக்கை, பெரியோர்மீது நம்பிக்கையின்றி நடப்பார்கள். மன முதிர்ச்சியற்று இருப்பர். லக்ன சுப குரு எதையும் நல்லதாக நினைக்கச் செய்ய, லக்ன நீசகுரு எதையும் எதிர்மறையாக நினைக்கச் செய்வார். ஏறுக்குமாறாகப் பேசுவார்கள்.

லக்ன சுப சூரியன் வரனை கம்பீரமாக- நிர்வாகத் திறனுள்ளவராக இருக்கச்செய்வார். லக்ன அசுப சூரியன் வரனைக் கோழையாக- பிறரைச் சார்ந்திருப்பவராக வைத்துவிடுவார்.

Advertisment

லக்ன சுபச் சந்திரன் அன்பானவராக- அரவணைக்கும் தன்மை கொண்டவராக வரனை ஆக்குவார். அசுப சந்திரன் பயந்த சுபாவம் மற்றும் நீர்த்தன்மையான நோயுள்ளவராக- எதிர்மறை எண்ணம் கொண்டவராக்கும்.

லக்ன செவ்வாய் முன்கோபம், முரட்டு குணமுள்ளவராக இருக்கச் செய்யும். இதிலும் லக்னத்திலுள்ள சுபச் செவ்வாய் பிறரைக் காப்பாற்றும். லக்ன அசுபச் செவ்வாய் பிறரை அடித்து காவல்துறை பிடியில் சிக்கச் செய்யும்.

லக்ன சுப புதன் மிகுந்த புத்திசாலியான வரனைத் தரும் அதேநேரம், லக்ன அசுப புதன் வரனை கோமாளிபோல மாற்றும்.

லக்ன சுக்கிரன் சுபத் தன்மையோடு இருப்பின் வரனை அழகானவராக- மிக அந்தஸ்து பார்ப்பவராக அமையச் செய்யும். இதே அசுப சுக்கிரன் வரனை எதிர்மறை அழகுணர்ச்சி உடையவராக்கிவிடும்.

லக்ன சனி மிகவும் சோம்பேறியாக்கும். வரனுக்கும் அழகுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனாலும் நன்றாக உழைப்பார். ஆனால் அசுப சனி அந்த வரனை தாழ்வு எண்ணம், சந்தேக புத்தி உடையவராக மாற்றும்.

லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள வரன்கள் சுயநலம், பேராசை, குறுக்குபுத்தி, இரக்கமில்லாமல் இருப்பது என எதிர்மறை குணங்களோடு இருப்பர்.

ஒரு வரனின் ஜாதகத்தில் லக்னத்திலிருக்கும் கிரகத்தை வைத்தே இவ்வளவையும் கூறமுடியும். இன்னும் லக்னாதிபதி எங்கு- எந்த சாரத்தில் உள்ளார் என கணித்து மேலும் விரிவாக வரனைப்பற்றி அறிய இயலும்.

2-ஆமிடம்

2-ஆமிடத்தைக்கொண்டு வரனின் பண விஷயம் பற்றி துப்புதுலக்கி விடலாம்.

2-ஆமிடத்தில் சுப கிரகங்கள் இருந்தால், வரன் நல்ல செல்வச் செழிப்புடையவர்; குடும்பம் நல்ல நிலையில் உள்ளது; பேச்சு சுத்தம் உடையவர்; நல்ல உணவுப் பழக்கம் கொண்டவர்; முக லட்சணம் பொருந்தியவர் என்று கூறிவிடலாம். இதுவே 2-ல் ராகு இருந்தால் வரன் லஞ்சப் பணவரவுள்ளவர் எனக்கூறும்.

2-ல் உள்ள அசுப சூரியன் மிகவும் திமிராகப் பேசுபவர் என உரைக்கும். 2-ல் உள்ள அசுப சந்திரன் வேகமாகப் பேசுவார் அல்லது அதிக செலவழிப்பார் எனக்கூறும். அசுபச் செவ்வாய் பிறரைத் தீய வார்த்தைகளால் திட்டுவார்; அதர்மமாகப் பணம் சம்பாதிப்பார் என கூறும். 2-ல் உள்ள அசுப புதன், பையன் கோமாளித்தனமாக உளறுவார்; காசு சம்பாதிக்கத் தெரியாது என்பதை உணர்த்தும். அசுப குரு வரன் பொய்பேசுவதில் திறமைசாலி என்று சொல்லும்.

அசுப சுக்கிரன் செல்வநிலை கீழ்மட்டத்தில் உள்ளது என்றும், அழகாகப் பேசி பிறரை ஏமாற்றுவார் என்றும், கண்களில் சற்று பாதிப்புள்ளது எனவும் உறுதிபட உரைக்கும். 2-ல் உள்ள அசுப சனி, வரன் காசை கண்ணாலும் பார்க்கமுடியாதவர் என கண்டிப்பாகக் கூறும். 2-ல் உள்ள ராகு- கேதுக்கள், தீய வார்த்தைகள் பேசுவதில் வரன் கில்லாடி என கூறிவிடும். 2-ஆமதிபதி இருப்பு வாய்ப்பேச்சு, காசு பணம் பற்றிக் கூறும்.

3-ஆமிடம்

இது மிகவும் முக்கியமானது. அதுவும் ஆண்களுக்கு- மாப்பிள்ளைக்கு 3-ஆமிடம் அதிமுக்கியம். 3-ஆமிடம் கெட்டுப்போய், 3-ஆமதிபதியும் கெட்டுப்போனால், ஜாதகரை ஒரு மருத்துவரிடம் பரிசோதித்து, "இவர் திருமணத்துக்கு ஏற்றவர்தான்' என சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்யவேண்டும். மற்றபடி இந்த இடம் வீரம், விவேகத்துக்கான இடம். இங்கு அமர்ந்த அசுப சூரியன், சந்திரன், புதன் ஆகியோர் வரனை உளறிக் கொட்டும்படி செய்வர்; பயம்கொள்ளச் செய்வர். சனி தொடர்ச்சியாகப் பேச இயலாமல் பின்நோக்கிச் செல்லவைப்பார். 3-ல் உள்ள அசுப குரு, சுக்கிரன் வரனை உற்சாகமற்று, மனநோய் உள்ளவர்போல காட்டுவர். ராகு- கேது வரனை வெளிப்படைத்தன்மையின்றி எதையும் பூடகமாகச் செயல்பட வைக்கும்.

4-ஆமிடம்

இது குறிப்பாக வரனின் சொத்து, கல்வி ஆகியவற்றைக் கூறும். மேலும் வரனின் தாயார் பற்றியும் அறிந்துகொள்ளலாம். 4-ல் சுபகிரகம் இருந்து, 4-ஆமதிபதியும் சுபத்தன்மையோடு இருந்தால் அந்த வரன் நல்ல சொத்து, வாகனம், கல்வி, நல்ல தாயார் போன்றவற்றைக் கொண்டிருப்பார் என்று கூறிவிடலாம்.

அன்றி 4-ல் சூரியன் கெட்டிருந் தால் தந்தை சொத்து இல்லையென முடிவுசெய்யலாம். 4-ஆமதிபதியும் கெட்டு 4-ல் சந்திரனும் கெட்டிருந்தால் வரனுக்கு கல்வி, தாயார், வயல், வாகனம் என எதுவுமே சரியில்லை என்று அனுமானிக்கலாம். இதுபோல செவ்வாய் கெட்டாலும் இருக்க இடமில்லை என தெரிந்துகொள்ளலாம். புதன் கெட்டால் வரனுக்கு கல்வி வரவே இல்லை; ஒரு பழைய சைக்கிள்கூட கிடையாது என அறிந்துகொள்ளலாம். குரு கெட்டிருந்தால் குடிசைகூட இல்லை; தாயார் நிலை சரியில்லை; கல்வியில் மந்தம் என அறியலாம். சுக்கிரன் கெட்டால் சுகமே அனுபவிக்க இயலாது எனலாம். சனி கெட்டால் வீடு குட்டிச்சுவராக இருக்கும் எனலாம். ராகு- கேதுக்கள் கெட்டால் வரன் வாழும் சூழல் சரியாக இல்லையென அறியலாம்.

5-ஆமிடம்

இந்த இடத்திற்கு ஆயிரம் விஷயங் கள் இருந்தாலும், திருமணமென்று வரும்போது ஒழுக்கம் என்னும் பண்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 5-ஆமிடம் குழந்தையை யும் குறிப்பிடும் என்றாலும், திருமணத்திற்கு முதலில் வரனின் ஒழுக்கமே ஓம்பப்படும். 5-ஆமிடம் சுப கிரகங்களால் ஆக்கிரமிக்கப் பட்டு 5-ஆமதிபதியும் நல்ல நிலையில் இருப்பின் வரன் ஒழுக்கமானவர்; பெண்ணைக் கொடுக்கலாம் அல்லது பெண்ணை எடுக்கலாம் என முடிவுக்கு வரலாம்.

அதுவன்றி 5-ஆமதிபதி கெட்டு 5-ல் ராகு- கேது, சந்திரனோடு இருந்தால் வரனுக்கு குடிப்பழக்கம் உண்டு எனலாம். இதேபோல இந்த இடத்தில் அசுபர் செவ்வாய் இருந்தால் மதுப்பழக்கமும் ஏராளமான காதல் விவகாரங்களும் இருக்கும். அசுப புதன் இருந்தால் அடக்க முடியாத அளவில் நிறைய காதலைத் தருவார். 5-ல் உள்ள அசுப புதன் அளக்கமுடியாத அளவில் நிறைய காதலைத் தருவார். அசுப குரு மறைவான தீய பழக்கங்களைக் கொடுப்பார். அசுப சுக்கிரன் நினைத்தறியா தீய பழக்கங்களையும், அசுப சனி புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் தருவர். இந்த 5-ஆமிடத்தை சுபர் பார்த்தால் தீய பழக்கங்கள் ஒரு வரையறைக்குள் இருக்கும்.

6-ஆமிடம்

பொதுவாக 6-ஆமிடம் என்பது கடன், நோய், எதிரி ஸ்தானம். இங்கிருக்கும் கிரகங்களை மட்டுமல்லாது, 6-ஆமதிபதி எங்கிருக்கிறார்- திருமண சமயத்தில் அவரது தசாபுக்தி நடக்கிறதா எனவும் அறிதல் அவசியம். 6-ஆம் பாவாதிபதி வலிமையாக இருந்தால் ஜாதகருக்கு பலமான எதிரிகள் உள்ளனர் என தெரிந்துகொள்ளலாம். 6--ல் உள்ள அசுப சூரியன் வயிற்றுப்புண் தொந்தரவையும், சந்திரன் சளி, ஜீரணக் குறைவையும், செவ்வாய் தசைப்பகுதி கோளாறையும், புதன் நரம்புப் பிரச்சினையையும், அசுப குரு ஞாபகமறதி, கொழுப்பு சார்ந்த பிரச்சினையையும், சுக்கிரன் சர்க்கரை நோயையும், சனி தோல் வியாதியும், ராகு மூச்சுவிடுவதில் தொல்லையையும், கேது பெண்கள் சார்ந்த நோயையும் தருவர். இந்த கிரகங்கள் அசுபத் தன்மையோடு அமர்ந்திருப்பர். மேலும் இந்த அசுப கிரகங்கள் இந்த வரன்களை வேலை செய்யவிடாமல் சோம்பலுடன் வைத்திருக்கும்.

7-ஆமிடம்

பொதுவாக 7-ஆம் வீட்டை களத்திர ஸ்தானம் என்றே கூறுவர். வரன் விஷயமாகப் பார்க்கும்போது இந்த வீட்டை, இந்த ஜாதகர் பிற மனிதர்களிடம் எவ்வாறு பழகுவார்- விட்டுக்கொடுத்து அனுசரணையாக நடந்துகொள்வாரா- கோபித்துக்கொண்டு திரிவாரா- ஆள் பார்த்துப் பேசுவாரா என பிறரிடம் இவர் பழகும் தன்மைகளைக் கண்டுகொள்ளலாம். 7-ஆம் வீட்டில் சுபர் இருந்து, 7-ஆமதிபதி சுபக் தன்மையோடு இருப்பின் ஜாதகர் பிறரிடம் மட்டுமல்ல; தன் வாழ்க்கைத் துணையிடமும் அன்பாக, பண்பாக மதித்துப் பழகுவார். இதே 7-ஆம் வீட்டில் அசுப சூரியன் இருப்பின் ஜாதகர் அறிவு குறைந்தவராக இருந்தாலும், "நான்தான் உயர்ந்தவன்' என்று செருக்குடன் பழகுவார். 7-ல் உள்ள அசுபச் சந்திரன் பேசாமடந்தையாக இருக்கச் செய்வார்.

அசுபச் செவ்வாய் கையால் பேசிப் பழக்கு வார். அசுப புதன் பேசிப்பேசி எதிராளிகளை நோகடித்து விடுவார். அசுப குரு "நானே அறிவாளி; நீ முட்டாள்' எனும் அகந்தை கொண்டு திரிவார். சுக்கிரன் இருக்க தனக்கு ஈடான மனிதர்களிடம் மட்டும் பேசச் செய்வார். அசுப சனி நடிப்புத் தன்மையோடு பேசிப் பழகுவார். ராகு- கேதுக்கள் பொய்மை நிறைந்து எதிர்மறைத் தன்மையோடு பேசுவார்.

இதனால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது 7-ஆமிடம் பாவர் சம்பந்தம் பெற்றால், பார்க்கும் வரனுக்கும் அதேபோல் பாவர் சம்பந்தம் வேண்டுமென கூறப் படுகிறது. ஏனெனில் இரண்டு பாவகிரக சம்பந்தமும் சரிசமமாகி, வாழ்க்கை வண்டி தடையில்லாமல் ஓடுமல்லவா?

8-ஆமிடம்

இது ஆயுள் ஸ்தானம் எனப்படுகிறது. பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். இதனை நன்கு பரிசீலித்து சேர்க்கவேண்டும். மேலும் வரனுக்கு 8-ஆமிட அதிபதி தசை அல்லது 8-ஆமிடத்தில் அமர்ந்த கிரகத்தின் தசை நடந்துகொண்டிருந்தால் அதனை நன்கு யோசித்து முடிவெடுக்கவேண்டும்.

9-ஆமிடம்

இந்த இடம் நிறைய விஷயங்களைக் கூறினா லும், திருமண வரன் என்று வரும்போது பாக்கியம் எனும் அதிர்ஷ்டத்தையும் நம்பிக்கையையும் தர்ம சிந்தனையையும் முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும். 9-ல் சுப கிரகங்கள் இருப்பினும், 9-ஆமதி பதி சுபமாக இருப்பினும் அந்த வரன் நம்பிக்கையுடன்- நேர் சிந்தனையுடன் உழைத்து அதிர்ஷ்டத்தை அழைத்து வருபவராக அமைவார். அதுவன்றி 9-ல் உள்ள ராகு- கேதுக்கள் மதம் மாறுவதையும், 9-ல் உள்ள அசுப சூரியன் பொலிவற்ற வாழ்க்கையையும், 9-ல் உள்ள சந்திரன் பயந்த எதிர்மறை சிந்தனையும், அசுப செவ்வாய் ரகசிய அதிர்ஷ்டத்தையும், அசுப சுக்கிரன் அதிர்ஷ்டம் இன்மையையும், அசுப குரு தெய்வங்களை நிந்தனை செய்வதையும், அசுப சனி குலதெய்வத்தை மறப்பதையும், அசுப புதன் எதற்கும் இயலாத தன்மையையும் கொடுத்துவிடுவர். இவ்வாறு 9-ல் அமர்ந்த அசுபர்களால் ஜாதகர் தெய்வ நிந்தனையால் விளங்காமல் ஆகிவிட்டாரா அல்லது விளங்காமல் ஆனதால் "சாமி கும்பிட மாட்டேன்' என்கிறாரா என பட்டிமன்றமே நடத்தலாம்.

10-ஆமிடம்

இந்த வீடு பொதுவாகத் தொழிலைக் குறிக்கும். ஒரு வரனுக்கு தொழில் தேவைதான். எனினும் ஒரு மனிதனுக்கு கௌரவம் என்பதும் மிக முக்கியம். இதன் உண்மையான பொருள் யாதெனில், அவர் யாரிடமும் கூழைக் கும்பிடு போடாமல், வளைந்து நெளியாமல், எவரிடமும் நடிக்காமல், பாதங்களை வருடாமல் இருத்தல் அவசியம். இதனால் அந்த வரன் நேர்கொண்ட பார்வையும், நேர்மையான செயல்களும், நிமிர்ந்த நன்னடையும், சீரிய சிந்தனையும் கொண்டு விளங்குவார். இதன்பொருட்டு தனது தொழிலையும் சீராக- நேர்த்தியாக நடத்துவார் என்பதில் ஐயமில்லை. இதனை பத்தாமிட சுபர் எளிதாகக் கூறுவார். இதுவே 10-ஆமிடத்தில் அமர்ந்த ராகு- கேதுக்கள் தொழிலில் திருட்டுத்தனத்தையும், அசுப சூரியன் லஞ்சம் கொடுத்தலையும், அசுப சந்திரன் கலப்படத்தையும், அசுப செவ்வாய் தொழிலில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், அசுப புதன் கூஜா தூக்குவதையும், அசுப குரு திருட்டு வழிகளைக் கைகாட்டுவதையும், அசுப சுக்கிரன் கவர்ச்சியால் தொழிலைக் கட்டிப்போடுதலையும், சனி கௌரவமில் லாத தொழில் வழிகளையும் காட்டிக் கொடுப்பவர்கள். இத்தகையவர்களை பொதுவெளியில் மதிப்பிழந்து செல்லாக் காசாகக் காட்டும் நிலை உண்டாகிவிடும்.

11-ஆமிடம்

இதனை லாப ஸ்தானம் என்றா லும், திருமணமென்று வரும்போது மாப்பிள்ளையாக வருபவர் ஒரே வீட்டுடன் இருப்பாரா அல்லது இரண்டு, மூன்று வீடுகளில் கிளைகள் பரப்பி வாழ்வாரா என்பதைக் கணிக்கவேண்டும். இதில் ஒன்றை மட்டும் மிகவும் கவனமாகக் கணித்தல் அவசியம். இந்த 11-ஆம் வீட்டில் எந்த பாவகிரகம் அமர்ந்துள்ளார்- எந்த கிரகச் சேர்க்கை- சாரநாதன் மற்றும் அவரின் தசாபுக்தி எப்போது வரும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போதோ, 80 வயதிலோ இந்த 11-ஆமிட தசை நடந்தால்தான் என்ன- நடக்கா விட்டால்தான் என்ன? ஒரு பாதிப்புமில்லை.

12-ஆமிடம்

இந்த வீட்டை விரய வீடு என்பர். எதனை விரயம் செய்வார்- எதை விட்டு நீக்குவார்? இதனை 12-ல் உள்ள சுபர்- அசுபர் கூறிவிடுவர். இந்த வீடு, வரன் வெளிநாடு செல்வதையும், மங்கள வைபவத்தையும், சுப சயனத்தையும், சிறை சயனத்தையும், மருத்துவமனை அலைக்கழிப்பையும் என அனைத்தையும் கூறும். சுபர் இருந்தால் பயனுள்ள செலவு, அலைச்சலையும்; பாவரின் இருப்பு வேண்டாத அலைச்சல், அவமானம் தருவதையும் குறிக்கும்.

எனவே, ஒரு வரனின் ஜாதகத்தைப் பார்க்கும்போது 12 ஸ்தானங்களிலும் ஏதோ ஓரிரண்டு கட்டங்களிலாவது பாவர் கள் இருக்கத்தான் செய்வர். அவரை சுபர் பார்த்தால் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளலாம். மேலும் 10-ஆமிடத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்பது ஜோதிட விதி. பாவகிரகங்கள் நீசமாகி அசுபத் தன்மையுடன் எந்த வீட்டில் உள்ளதோ அதன்பொருட்டு சற்று கவனமாக இருந்து, வாழ்க்கைத்துணையைக் கையாளத் தெரியவேண்டும்.

"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்து' என்று எந்த மகானுபாவரோ சொல்லிவிட்டுச் சென்று விட்டார். எவ்வளவு பொய்யென்று தெரிந்துவிட்டால் பிறகு கையாள்வது எளிதல்லவா!

செல்: 94449 61845